திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 8-ம் தேதி இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட 6 பேர் இறப்பு, பலர் படுகாயம், லட்டு கவுண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும் இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திடீரென மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தங்களுடைய முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மத்தியிலும் அதே கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் பின்வாங்கி உள்ளது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.