மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை அவரது வீடுபுகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் நபர் ஒருவரை மகாராஷ்டிராவின் தானேவில் போலீஸார் இன்று கைது செய்தனர்.
நடிகர் மீது தாக்குதல் நடத்தியவர் முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சயிப்பின் வீட்டினுள் புகுந்து அவரைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். 30 வயதான ஷெஹ்சாத், தானேவில் உள்ள ஒரு ஹவுஸ் கீப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். அவர் தானே நகரில் உள்ள ஹிராநந்தினி எஸ்டேட்டில் உள்ள ஒரு மெட்ரோ கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள பணியாளர் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நடிகரின் வீட்டில் நுழைந்துள்ளார்.
இந்த கைது குறித்து மும்பை போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,”மும்மது இஸ்லாமிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த அவர், மும்பையை அடைந்துள்ளார். கடந்த ஐந்து ஆறு மாதங்களில் மும்பை மற்றும் தானேவில் பல பகுதிகளில் வேலை செய்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு ஒப்பந்ததாரரிடம், கட்டுமான பணி செய்துவந்துள்ளார். சயிப் அலிகானை தாக்கிய பின்பு தொடர்ந்து ஊடக செய்திகளை பார்த்து வந்த முகம்மது இஸ்லாம், கைது பயம் காரணமாக தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார்.” என்றார்.
வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்காக முகம்மது இஸ்லாமை போலீஸார் பாந்திரா அழைத்து வந்தனர். மும்பை போலீஸ் குழு அவரைக் கைது செய்தது.
முன்னதாக, ஜன.16 அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள ‘சத்குரு ஷரன்’ என்ற தனது இல்லத்தில் இருந்தபோது, சைஃப் அலி கான் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மும்பை போலீஸார் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு அதிலிருந்து பெறப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவரின் படத்தை போஸ்டராக மும்பை மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் ஒட்டியிருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வதற்காக மும்பை போலீஸார் 30 தனிப்படை அமைத்திருந்தனர்.