பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை

கெய்ரோ,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.

மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது. ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டு வந்தன. போரை நிறுத்த ஏதுவாக நடந்து வரும் இதில் பலன் ஏற்பட்டது. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்கள் 94 பேரை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பணயக் கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் அமலாகாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விடுவிக்கப்படும் பயணக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பயணக் கைதிகளின் பட்டியலை தரும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணக் கைதிகளின் பட்டியல் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசாவின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுகாதார அமைப்பு, சாலை வலையமைப்பு மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அதன் இறுதி கட்டத்தை எட்டும்நிலையில், மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தது பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. காசாவின் எதிர்காலம், அரசியல் மற்றும் பிற முக்கிய கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.