பணியில் இருப்பதாக நடிக்கும் சீன இளைஞர்கள்: தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகம் செல்கின்றனர்

சீனாவில் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சீன இளைஞர்கள் வேலையிழப்பை மறைத்து பணியில் இருப்பதாக நடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இதன்காரணமாக அந்தநாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் உற்பத்தி, கார் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. சீனாவின் முதுகெலும்பாக கருதப்படும் ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

அந்த நாட்டில் சுமார் 22 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். சுமார் 40 சதவீத சீன இளைஞர்கள் மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். பொருளாதார மந்தநிலை காரணமாக சீனா முழுவதும் வேலையிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் பெரும்பாலான சீன இளைஞர்கள், வேலையிழப்பை மறைத்து பணியில் இருப்பதாக நடித்து வருகின்றனர். இதுகுறித்து சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்த சென் (29) என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: செமி கண்டக்டர் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்தேன். நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். நான் வேலை இழந்ததை எனது காதலி, குடும்பத்தினரிடம் கூறவில்லை. பணியில் இருப்பதாக நடித்து வருகிறேன்.

இதற்காக சில நிறுவனங்கள், போலி அலுவலகங்களை நடத்தி வருகின்றன. தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகத்துக்கு செல்லலாம். அங்கு கார்ப்பரேட் நிறுவனம் போன்று மேஜை, கணினி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். மதிய உணவும் அளிப்பார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போலி அலுவலகத்தில் பணியில் இருப்பது போன்று நடிக்கலாம்.

காதலி அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் சந்திக்க வந்தால் ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகத்துக்கு சென்றுவிடுவேன். இதர நாட்களில் ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு சென் கூறியுள்ளார்.

சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்த ஜியாவெய் கூறும்போது, “இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். எனது நிறுவனம் திவாலாகி வேலையிழந்துவிட்டேன். இதை மறைத்து வேலையில் இருப்பதாக குடும்பத்தினரிடம் நடித்து வருகிறேன். குடும்பத்தில் யாராவது என்னை பார்க்க வந்தால், கட்டணம் செலுத்தி போலி அலுவலகத்துக்கு பணிக்குச் செல்வேன். இதர நாட்களில் டீ கடையில் வேலை செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத சீன சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சீனாவில் வேலையிழப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. புதிய வேலை கிடைக்காமல் சீன இளைஞர்கள் பரிதவித்து வருகின்றனர். எனினும் திருமணம், சமூக அந்தஸ்தை கருத்தில் கொண்டு பணியில் இருப்பதாக பெரும்பாலான சீன இளைஞர்கள் நடித்து வருகின்றனர்.

இதற்காகவே சீனா முழுவதும் பல்வேறு போலி நிறுவனங்கள் புற்றீசல்போல முளைத்துள்ளன. இந்த போலி நிறுவனங்கள் கார்ப்பரேட் அலுவலகம் போன்று நகரின் முக்கிய பகுதிகளில் போலி அலுவலகங்களை அமைத்து உள்ளன. இதில் சாதாரண ஊழியர் போன்று அமர்ந்திருக்க ஒரு நாளுக்கு ரூ.290 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போலி அலுவலகத்தில் ஒருநாள் மேலாளராக அமர ரூ.1,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வேலைஇழந்த இளைஞர்கள் கட்டணம் செலுத்தி போலி அலுவலகத்துக்கு செல்கின்றனர். பணியில் இருப்பது போன்று செல்பி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

சீனாவில் ஆட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் அரசு, ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை மூடி மறைத்து வருகிறது. இவ்வாறு சீன சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.