மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள 1000+ பெண்கள் ஆர்வம்

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜனவரி 27-ம் தேதி முதல் நடைபெறும் சேர்க்கையில் இணைய சுமார் 1,000 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் நாட்டின் 13 அகாடாக்களும் முகாமிட்டுள்ளன. கடந்த 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மகா கும்பமேளாவில் இளம் தலைமுறையினர் துறவறம் பூணும் நிகழ்ச்சி அகாடாக்களில் நிகழும்.

இந்த முறை மகா கும்பமேளாவில் வரலாறு படைக்கும் வகையில் பெண்கள் துறவறம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். இதுகுறித்து ஜுனா அகாடாவின் மூத்த துறவி திவ்யா கிரி கூறும்போது, “எங்கள் அகாடாவில் மட்டும் இந்த முறை 200 பெண்கள் துறவறத்துக்காக பதிவு செய்துள்ளனர். இதர 12 அகாடாக்களையும் சேர்த்தால் துறவியாகும் பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி நடைபெறுகின்றன. இவர்களுக்கு துறவறம் மேற்கொள்ள வைக்கும் நிகழ்ச்சி 27-ம் தேதி நடைபெறும்” என்றார்.

சனாதன தர்மத்தில், துறவறத்துக்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த துறவறத்தை ஒரு சாதாரண மனிதர் முதல் குடும்பவாசி வரை பலரும் மேற்கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் விபத்து, உலக வாழ்க்கையில் வெறுப்பு, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் பணம் அல்லது ஆன்மிக அனுபவத்தில் திடீர் ஏமாற்றம் போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. இந்த முறை துறவறம் மேற்கொள்ள உள்ள பெண்களில், உயர்க் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குஜராத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யும் ராஜ்கோட்டின் ராதே நந்த் பாரதி கூறுகையில், “எனது தந்தை மிகப்பெரிய செல்வந்தர். எனது வீட்டில் எனக்காக அனைத்து வசதிகளும் உள்ளன. அதில் இல்லாத ஆன்மிக அனுபவத்துக்காக நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஜுனா அகாடாவில் எனது குருவிடம் சீடராக நான் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.