இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா’.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் இயக்குநர் மிஷ்கின், மது குறித்தும் இளையராஜா குறித்தும் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசியிருக்கும் மிஷ்கின், “மது அருந்துவது என்பது ஒரு நிலை. மன வருத்தம் அதிகமுள்ளவர்கள் மது அருந்துகிறார்கள். பிறகு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். நானும் பெரும் குடிகாரன். ஆனால், எனக்கு வாழ்க்கையில் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு அதைவிட மிகப்பெரிய போதை இருக்கு, அது சினிமா. இயக்குநர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜானு ஒருத்தன் இருக்கான். அவன் மிகப்பெரிய போதை எனக்கு. பலரையும் குடிகரனாக மாத்தியது அவர்தானு வைச்சிக்கலாம்” என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாலியான பேச்சாக இருந்தாலும், மேடை நாகரீகம் இல்லாமல் மிஷ்கின் பேசியிருப்பதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.