அரசு பள்ளி பாட புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில் 30 சதவீதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்துக்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவுக்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.