ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ல் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 981 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக 719 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேநேரம், படேல் நகர் மற்றும் கஸ்தூர்பா நகர் தொகுதியில் குறைந்தபட்சமாக 5 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கேஜ்ரிவாலை எதிர்த்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இருவர் போட்டியிடுகின்றனர். அதன்படி, சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா பாஜக சார்பிலும், ஷீலா தீக்சித் மகன் சந்தீப் தீக்சித் காங்கிரஸ் சார்பிலும் கேஜ்ரிவாலுக்கு எதிராக களத்தில் உள்ளனர்.
டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வந்த காங்கிரஸ் கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.
கடந்த 2020-ல் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதியை கைப்பற்றியது. பாஜகவுக்கு 8 இடங்களே கிடைத்தன.