ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில், ஐஎம்ஏ புதிய தலைவர் டாக்டர் திலிப் பானுஷாலி பேசியதாவது:
ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயிற்சி பெற்று சிகிச்சை வழங்குபவர்கள் நவீன ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறையை கையாள்பவர்களில் 80 சதவீதம் பேர் நவீன ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்து வருகின்றனர். இது ஆபத்தானது ஆகும்.
ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இதர பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் மருத்துவ முறையை கையாளலாம். ஆனால் நவீன ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டாம் என்றுதான் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நவீன மருத்துவத்தில் முறையான பயிற்சி இல்லாதவர்கள், அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி அறியாத நோயாளிகளுக்கு அதிக அளவு ஸ்டெராய்டுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரை செய்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நவீன அறுவை சிகிச்சை நிபுணர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நன்கு பயிற்சி பெற்ற பிறகே சிசிக்சையில் ஈடுபடுகின்றனர். ஆனால், குறுகிய காலம் பயிற்சிபெறும் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவர்களை, அறுவை சிகிச்சை நிபுணருக்கு இணையான கடமைகளைச் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்களால் தங்கள் நோயாளிகளுக்கு தீர்வை வழங்க முடியுமா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.