Umesh Yadav Retirement | இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் உமேஷ் யாதவ். அவரை கடந்த ஒன்றரை வருடமாக இந்திய அணி எந்த தொடருக்கும் தேர்வு செய்யவில்லை. தேர்வுக்குழு தொடர்ச்சியாக அவரை புறக்கணித்து வருவதால். விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் அவர். ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் கடைசியாக 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடினார். அந்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில்கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் உமேஷ் யாதவ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஏமாற்றம்
37 வயதாகும் உமேஷ் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார், ஆனால் ஐபிஎல் 2025 சீசனுக்கு அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இது குறித்து தன்னுடைய அதிருப்தியை உமேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். “இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். நான் 15 வருடங்களாக விளையாடி வருகிறேன். இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாதது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?. சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும், என்னை எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.” என கூறியுள்ளார்
ஐபிஎல் ஏலம் மீது புகார்
தொடர்ந்து பேசியிருக்கும் உமேஷ் யாதவ், ‘ஏலத்தில் என் பெயர் தாமதமாக வந்தது. அந்த நேரத்தில் எந்த ஐபிஎல் அணி உரிமையாளர்களிடமும் பணம் மிச்சமில்லை. ஏன் தாமதமாக என் பெயர் வந்தது என தெரியவில்லை. ஆனாலும், ஏதோ நடந்துவிட்டது. நான் மிகவும் ஏமாற்றமடைந்து வருத்தமடைந்துள்ளேன். பரவாயில்லை. யாருடைய முடிவையும் என்னால் மாற்ற முடியாது.” என உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார். உமேஷ் யாதவ் ஐபிஎல்லில் 148 போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்
உமேஷ் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 288 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்காக 57 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் 170 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உமேஷ் யாதவ் தனது கடைசி சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக ஜூன் 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார்.