என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என சஞ்சய் ராய் தாய் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிபர் தாஸ் தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் 20-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இதுகுறித்து சஞ்சய் ராயின் தாய் மலாட்டி ராய் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “என் மகளைப் போன்றவர் பெண் பயிற்சி மருத்துவர். அவருடைய தாயின் வேதனையையும் வலியையும் என்னால் உணர முடிகிறது. இந்த வழக்கில் என் மகன் குற்றவாளி என சட்டப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் மகனுக்காக நான் தனியாக அழுவேன். ஆனால், தண்டனையை விதியாக ஏற்றுக் கொள்வேன்” என்றார்.