மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை கத்தியால் 6 முறை குத்திய வங்கதேசத்தை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது தளத்தில் உள்ள வீட்டில் கடந்த புதன்கிழமை அதிகாலை நுழைந்த மர்ம நபர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். படுகாயம் அடைந்த சயீப் அலிகானை மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
இதற்கிடையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த சிசிடிவி.க்கள் மற்றும் அந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
பின்னர், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் சந்திப்பு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா என்பவரை கைது செய்தனர். அவருடைய புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டனர். ஆனால், சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் அவர் இல்லை என்று தெரிய வந்தது. எனவே கனோஜியாவை நேற்று விடுவித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆவணங்கள் இல்லை: இந்நிலையில், வங்க தேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்த போது, அவர்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளார். பின்னர் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்ற உண்மையான பெயரை மறைத்து பிஜாய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு சில மாதங்கள் தானே பகுதியில் வசித்துள்ளார். அவர் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, சயீப் அலிகானை கத்தியால் குத்தியது, அங்கிருந்த பணியாளர்களை தாக்கியது உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவரிடம் விசாரித்த போது, இந்தியர் என்பதற்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதையடுத்து, ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத்தை போலீஸார் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, நீதிமன்றத்தில் போலீஸார் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, ‘‘ஷரிபுல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளார். அவருக்கு உதவியவர்கள் யார், தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தவர்கள் யார் போன்ற விவரங்களை அறிய வேண்டும். எனவே, அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
அதற்கு ஷரிபுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பிரஜாபதி எதிர்ப்பு தெரிவித்தார் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஷரிபுல்லிடம் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.