டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 477 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடந்த 17-ம் தேதி கடைசி நாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. இதில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 477 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அர்விந்த் கேஜ்ரிவாலின் வேட்பு மனுவில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் அவர் மீது உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரம் வேட்பு மனுவில் இல்லை, அதனால் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனுவை நிராகரிக்க கோரி, தேர்தல் அதிகாரியிடம், பாஜக வேட்பாளர் பர்வேஸ் வர்மாவின் பிரதிநிதி சங்கேத் குப்தா புகார் அளித்தார். இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 68 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. 2 தொகுதிகள் மட்டுமே கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம்விலாஸ்) வழங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியை சந்தித்தன. 2020-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 8 இடங்களை பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகின்றன.