வாஷிங்டன்: தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் நேற்றைய தினம் டிக்டாக் செயலியின் சேவை தடை செய்யப்பட்டது. இந்த சூழலில் அந்த செயலி தடையை தகர்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளதாக தெரிகிறது.
அதை குறிப்பிடும் வகையில் டொனால்ட் ட்ரம்புக்கு டிக்டாக் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசு, டிக்டாக் செயலியை தடை செய்யும் சட்டத்தை அமல் செய்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், இன்று ஆட்சி ஏற்கும் நிலையில் இது நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு நேற்றோடு நிறைவடைந்தது. இந்த உத்தரவை முந்தைய பைடன் அரசு பிறப்பித்தது. இந்த சூழலில் ட்ரம்ப் அதற்கான காலக்கெடுவை மேலும் 90 நாட்கள் வரை நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக்கின் மீட்சி அதை குறிப்பதாகவே உள்ளது.
அமெரிக்க சந்தையில் டிக்டாக்கின் சந்தை மதிப்பு கூடிக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் டிக்டாக் நிறுவன பங்கில் சுமார் 50 சதவீதம் அமெரிக்கர்கள் வசம் இருக்க வேண்டியது அவசியம் என ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் மட்டும் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.