தமிழகத்தில் இன்று முதல் ஜன. 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் சில இடங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.

வரும் 21, 22, 23-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 24, 25 தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 15 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 14 செ.மீ., காக்காச்சி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் 12 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, மயிலாடுறை ஆகிய இடங்களில் 11 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் 8 செ.மீ., தலைஞாயிறில் 7 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.