காரைக்குடி: ‘தவெக தலைவர் விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார்’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளரிடம் அவர் கூறியது: “காரைக்குடியில் வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் வருகை மாவட்டத்துக்கு நல்லது. அப்போதுதான் அதிகாரிகள் மக்கள் பணிகளில் வேகமாக செயல்படுவர். மாவட்டத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்போம்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குடிப்பதை பற்றி பேசியது அவர் பதவிக்கு அழகல்ல. கோமியம் குடிப்பது பழமையான மத நம்பிக்கையாக இருக்கலாம். அதற்காக விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டதை கூறக்கூடாது. தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநர் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை.
சென்னை விமான நிலையம் மோசமாக உள்ளது. அதை சர்வதேச விமான நிலையம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது. விமான நிலையத்தை வைத்துதான் நாட்டின் வளர்ச்சியை கூற முடியும். அதனால் சென்னைக்கு புதிதாக நவீன விமான நிலையம் தேவை. நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய, மாநில அரசு ஒற்றுமையுடன் முடிவு செய்த நடவடிக்கையை வேண்டாம் என்று கூறுவது விஜய்க்கு நல்லதல்ல. தமிழக வளர்ச்சிக்கு எதிராக அவர் பேசுகிறார். விமான நிலையம் பற்றி மாநில நிதி அமைச்சர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார்” என்று அவர் கூறினார்.