திருச்சி: திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரிய மங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரைசாலை முறையாக சீரமைக்கப்படாமல் சின்னாபின்னமாகி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனே செப்பனிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை முறையாக பராமரிப்பதில்லை என குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் சேகரன் கூறியது: திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலையில் தொடங்கி துவாக்குடி வரையிலான 14 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாக இருக்கிறது.
இதன் காரணமாக இந்த சாலையில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நேரிடுகின்றன. விபத்துகளை தடுக்க போதிய நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுப்பதில்லை. சாலையில் மேற்கொள்ளப்படும் அரைகுறை சீரமைப்பு பணிகள் விபத்தை தவிர்ப்பதற்கு பதிலாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.
அரியமங்கலம் ரயில்வே மேம்பாலம் இணைப்புகளில் சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் கீழுள்ள சுரங்கப்பாதை வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாதவாறு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை பராமரித்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையமே சாலையை பராமரிக்கும் பணியை செய்து வருகிறது.
ஆனால், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலையில் மேற்கொள்ள வேண்டிய எவ்வித சாலை பராமரிப்பு நடவடிக்கைகளும் இந்த சாலையில் மேற்கொள்ளப்படவில்லை. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை முறையாக பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரியமங்கலம் பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறும்போது, ‘‘சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக அமைக்க வேண்டும். சாலையில் தேவைப்படும் இடங்களில் மின் விளக்குகள், இதர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இங்கு 9 ஆண்டுகளாகியும் புதிதாக தார் சாலை அமைக்காமல் ஆங்காங்கே சேதமடைந்த பகுதிகளில் பேட்ச் ஒர்க் மட்டும் செய்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர்.
விபத்துகளிலும் சிக்கிக் கொள்கின்றனர். சாலையை சரியாக பராமரிக்காத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணத்தை மட்டும் மிகவும் கறாராக வசூலிக்கிறது. பொது நல அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைதியாக இருக்கிறது.
ரூ.47 கோடியில் இந்த சாலையை செப்பனிட, மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக 7 மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்னமும் சாலையை மேம்படுத்தாமல் உள்ளனர்.
இந்த சாலையின் பெரும்பகுதி அமைந்துள்ள தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. துரை வைகோ ஆகியோர் இந்த சாலையை உடனே மறுசீரமைப்பு செய்யக் கோரி அரசு அதிகாரிகளுக்கு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.