மதுரை: திருப்பரங்குன்றம் இஸ்லாமிய தர்கா விவகாரத்தை அரசியலாக்க முயலுவோரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவில் தடையை மீறி கந்தூரி விழா நடத்த சென்ற ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போலீஸாரால் தடுக்கப்பட்டனர். இதையொட்டி மணப்பாறை எம்எல்ஏ மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது திருப்பரங்குன்றம் வந்தார். அவர் தர்கா பகுதியில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை மீது கந்தூரி விழா நடத்த அனுமதி மறுப்பது குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் மனு அளித்தேன். தொடர்ந்து இது குறித்து சட்டசபை விவாதத்தின்போது பேசப்பட்டது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
மலை மேல் நான் நடத்திய ஆய்வின்படி, 60, 70 ஆண்டுக்கு முன்பாகவே தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு உணவு சமைத்து வழங்கியுள்ளனர். கந்தூரி விழா நடந்ததற்கான ஆதாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டு இருக்கிறது. சிக்கந்தர் மலை என்பதற்கான ஆதாரம் 1920-ல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலும் சொல்லப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரும் தர்காவில் வழிபடும் நிலையில், சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாடு உரிமை உள்ளது. இதனை சர்ச்சையாக்கி அரசியலாக்க முயற்சிப்போரை தனிமைப்படுத்த வேண்டும்.
இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்காவில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். தர்காவுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க அதிமுக ஆட்சியில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தனர். அந்த நிதி வேறு திட்டத்துக்கு மாற்றப்பட்டது. இது பற்றியும் தமிழக அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.