புதுடெல்லி: வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளா, தென் மாநிலங்களில் நடைபெறும் புஷ்கரம் ஆகிய நிகழ்வுகள் சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கின்றன என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மாதம்தோறும் ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான 118-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் உங்களை சந்தித்து வருகிறேன். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், ஒரு வாரம் முன்னதாகவே உங்களுடன் பேசுகிறேன்.
இது இந்திய குடியரசின் 75-வது ஆண்டாகும். அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நேரத்தில் அம்பேத்கர், நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரது வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.
தேசிய வாக்காளர் தினம் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில்தான் இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 1951-52-ம் ஆண்டில் முதல்முறையாக தேர்தல் நடந்தபோது, மக்களாட்சி நிலைத்திருக்குமா என்று சிலர் சந்தேகம் எழுப்பினர். இன்று ஜனநாயகத்தின் தாயாக பாரதம் உருவெடுத்துள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்மையாக தேர்தல்களை நடத்தி வரும் தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகள்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமையின் சங்கமமாக கும்பமேளா திகழ்கிறது. பாரத மக்கள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் குவிந்து வருகின்றனர். தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் அனைத்து திசைகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இந்த விழாவில் எங்கும், எதிலும் வேறுபாடு இல்லை, சாதிபேதம், ஏழை – பணக்காரர்கள் பேதமின்றி அனைவரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.
பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்வாரில் கும்பமேளா நடப்பதுபோல தெற்கில் கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை, காவிரி நதிகளின் கரைகளில் புஷ்கரம் நடக்கின்றன. நமது நதிகளோடு மக்களின் நம்பிக்கைகள் பின்னிப்பிணைந்துள்ளன. கும்பகோணம் தொடங்கி திருக்கடையூர், குடவாசல், திருச்சேறை வரை பல்வேறு கோயில்கள் கும்பத்தோடு தொடர்புடையதாக இருக்கின்றன. கும்பமேளா, புஷ்கரம், கங்கா சாகர மேளா ஆகிய நிகழ்வுகள் சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கின்றன.
விண்வெளி துறையில் சாதனை: இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விண்வெளி துறையில் பல்வேறு சரித்திர சாதனைகளை பாரதம் படைத்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘பிக்ஸல்’, 3 செயற்கைக் கோள்கள் அடங்கிய தொகுப்பை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்மூலம் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்க முடியும். இது ஒரு புதிய சாதனை. அதேபோல, விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4-வது நாடாக பாரதம் இந்த சாதனையை செய்துள்ளது.
விண்வெளி நிலையம் அமைப்பது தொடர்பாக சென்னை ஐஐடி எக்ஸ்டெம் மையம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 3டி கட்டிடங்கள், உலோக நுரைகள், கண்ணாடி ஒளி இழைகள் குறித்தும் இந்த மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டுமானங்களை கட்டுவது குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறது.
ககன்யான் திட்டம் மற்றும் விண்வெளி நிலையம் அமைக்க இந்த மையத்தின் ஆய்வு உறுதுணையாக இருக்கும். அசாமின் நவுகான் பகுதியில் பயிர்களை யானை கூட்டம் நாசம் செய்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, யானைக்கு மிகவும் பிடித்தமான நேப்பியர் ரக புற்களை அங்கு உள்ள வறண்ட பூமியில் மக்கள் வளர்த்தனர். இதன்பிறகு, பயிர்கள் சேதமடைவது கணிசமாக குறைந்துவிட்டது.
ஸ்டார்ட்-அப் செங்கல்பட்டு: தற்போது சிறிய நகரங்களிலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செங்கல்பட்டு, அம்பாலா, ஹிஸார், காங்க்டா, பிலாஸ்பூர், குவாலியர், வாஷிம் போன்ற நகரங்கள் ஸ்டார்ட்-அப் மையங்களாக மாறி வருகின்றன. ஜனவரி 23-ம் தேதி நேதாஜி பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்பட உள்ளது. பாரத இளைஞர்கள் அவரை பற்றி அதிகம் படிக்க வேண்டும், அவரது வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.