புதுடெல்லி:
டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகள், முக்கிய திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அவ்வகையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. இந்த தேர்தல வாக்குறுதிக்கு எதிராக விஜய் குமார் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித் தொகை தொடர்பான தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தத் திட்டம் தொடர்பான ஆம் ஆத்மி கட்சியினர் படிவங்களை நிரப்புவதை தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டார். ஆம் ஆத்மி தவறான அறிவிப்பின் மூலம் வாக்காளர்களை கவர்ந்திருப்பதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இதற்கு முன்பு மூன்று முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, மீண்டும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 30-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது.