மக்கள் ‘நம்பும்’ நாடுகளின் பட்டியலில் ஓர் இடம் சரிந்து 3-ம் இடத்தில் இந்தியா!

டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஓர் இடம் பின்னடவைக் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் நாடுகளை பல நிலைகளில் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும் எடில்மேன் என்ற அமைப்பு 2024-ம் ஆண்டுக்கான தனது 25-வது ஆண்டறிக்கையை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் சமர்ப்பித்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, சீனா, கனடா, பிரேசில் என 28 நாடுகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக எடில்மேன் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 1150 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் இயங்கக்கூடிய நிறுவனங்களைக் கொண்டுள்ள நாடுகள் மீது வெளிநாட்டினர் வைக்கும் நம்பகத்தன்மை குறித்த பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. இதில் கனடா முதலிடத்திலும், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக எடில்மேன் அறிக்கை தெரிவிக்கிறது.

அரசாங்கம், வணிகங்கள், ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்கான ஒட்டுமொத்த பட்டியலில் சீனா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், இந்தோனேஷியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், கடந்த முறை 2-ம் இடம் பிடித்த இந்தியா இம்முறை மூன்றாம் இடம் பிடித்துள்ளதாகவும் எடில்மேன் அறிக்கை கூறுகிறது. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில், குறைந்த வருமானம் பெறும் மக்களே குறைவான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய நிறுவனங்கள் மீதான குறைந்த வருமானம் பெறும் மக்களின் நம்பிக்கை 65 சதவீதமாகவும், அதிக வருமானம் பெறும் மக்களின் நம்பிக்கை 80 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் வன்முறை மற்றும் தவறான தகவல் பரவல் ஆகியவை மாற்றத்திற்கான சட்டபூர்வ கருவிகளாகக் கருதப்படுவதாகவும் இது கவலை அளிக்கக்கூடியது என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தேர்தல்கள் அல்லது அரசாங்கங்கள் மாறுவதால் ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

உலகின் மிகப் பெரிய 10 பொருளாதாரங்களில் ஐந்து நாடுகள் நம்பிக்கை குறியீட்டில் மிகக் குறைந்த நம்பிக்கையை கொண்டுள்ளன. ஜப்பான் (37 சதவீதம்), ஜெர்மனி (41), இங்கிலாந்து (43), அமெரிக்கா (47) மற்றும் பிரான்ஸ் (48). வளரும் நாடுகள் அதிக நம்பிக்கை கொண்டவையாக மாறி உள்ளன. சீனா (77 சதவீதம்), இந்தோனேசியா (76), இந்தியா (75) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (72) என வளரும் நாடுகள் நம்பிக்கை குறியீட்டைக் கொண்டுள்ளன.

பணக்காரர்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்துவதைத் தவிர்க்கிறார்கள் என்று 67 சதவீதம் மக்கள் நம்புவதாகவும், பொது மக்களின் பல பிரச்சினைகளுக்கு அவர்களின் சுயநலமே காரணம் என்று 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.