வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில், அவர் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் திட்டம் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சியை கடந்து வந்த ட்ரம்ப், அதிபராக பதவியேற்க உள்ளார். கடும் குளிர் காரணமாக பதவியேற்பு விழா உள் அரங்கில் நடைபெறுகிறது. ஜே.டி.வான்ஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர்களது குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்கின்றனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
அதிபராக பதவியேற்ற முதல் நாளன்று பல்வேறு முக்கிய உத்தரவுகளை ட்ரம்ப் பிறப்பிக்க உள்ளார். அதன் எண்ணிக்கை மட்டும் சுமார் 200 என தகவல். சட்டவிரோத குடியேற்றம் குறித்த உத்தரவு இதில் முக்கியமானது. செயிண்ட் ஜான்ஸ் தேவாலயத்துக்கு வந்த ட்ரம்ப் அங்கிருந்து வெள்ளை மாளிகை புறப்பட்டார்.
வெள்ளை மாளிகைக்கு அவர் சென்ற போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பைடன் அவரை வரவேற்றார். பின்னர் இருவரும் சுமார் 35 நிமிடங்கள் தனிமையில் சந்தித்து பேசினர். அங்கிருந்து பதவியேற்பு விழா நடைபெற உள்ள கேப்பிட்டலுக்கு புறப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் அங்கு ட்ரம்ப் பதவியேற்கிறார். அங்கு அமெரிக்காவின் தேசிய கொடி உயர பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.