இந்திய டி20 படை ரெடி… பிட்ச் யாருக்கு சாதகம்? போட்டியை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?

India vs England T20I, When And Where To Watch Live Telecast: இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோத இருக்கின்றன. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளன. 

அந்த வகையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை டி20 அரங்கில் நேருக்கு நேருக்கு எத்தனை முறை மோதி உள்ளன, இதில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறது, நாளை நடைபெற உள்ள முதல் டி20 போட்டி குறித்தும், இந்த போட்டியை எங்கு, எப்போது காணலாம் என்பதையும் இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

IND vs ENG T20: நேருக்கு நேர் – யார் ஒஸ்தி?

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இரு அணிகளும் சர்வதேச டி20 அரங்கில் 24 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்தியா 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனலாம்.

IND vs ENG T20: பலமான இந்திய அணி

ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பண்ட் போன்றோர் இந்தியா – இங்கிலாந்து டி20ஐ தொடரில் இடம்பெறவில்லை. சிராஜ் ஓடிஐ தொடரை போன்று டி20 போட்டிகளிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கு பேக்அப்பாக துருவ் ஜூரேல் உள்ளார். அந்த இடத்தில் முன்னர் இருந்த ஜித்தேஷ் சர்மா தற்போது கழட்டிவிடப்பட்டுள்ளார். முகமது ஷமி 2023 நவம்பருக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப உள்ளார். இந்திய டி20 அணி பலமான அணியாகவே காட்சியளிக்கிறது.

IND vs ENG T20: ஆடுகளம் எப்படி இருக்கும்?

முதல் டி20 போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பெரும்பாலும் பேட்டிங் சார்ந்த ஆடுகளங்கள்தான் இருக்கும். அதே நேரத்தில் பெரிய ஸ்கோர் அடிக்கப்பட்டாலும், சேஸ் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கும். ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் சிறப்பான அவுட்பீல்ட் கிடைக்கும். பேட்டர்களுக்கு சொர்க்கம் என்றாலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் இங்கு ஆடுகளங்கள் உதவும். வருண் சக்ரவர்த்தி நாளைய போட்டியில் முக்கியத்துவம் பெறுவார். நாளை டாஸை வெல்லும் அணிகள் முதலில் பந்துவீச்சைதான் தேர்வு செய்யும். மழைக்கு வாய்ப்பே இல்லை.

IND vs ENG T20: எங்கு, எப்போது நேரலையில் பார்ப்பது?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும். போட்டியின் டாஸ் 6.30 மணிக்கு போடப்படும். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் மூலம் பார்க்கலாம். ஓடிடியில் பார்க்க நினைப்பவர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம். டி20 தொடர் மட்டுமில்லை ஒருநாள் தொடரிலும் இதே தளங்களில் நீங்கள் காணலாம், போட்டி தொடங்கும் நேரம் மட்டுமே மாறுபடும். 

IND vs ENG T20: கணிக்கப்படும் பிளேயிங் லெவன்

இந்திய அணி (கணிப்பு): சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து அணி (கணிப்பு): ஜோஸ் பட்லர் (கேப்டன்) & (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ரெஹான் அகமது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.