கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி: ஐஐடி இயக்குநர் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: மாட்டு கோமியத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, ‘‘மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், ‘அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில், அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவரை போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல’ என தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘ஐஐடி இயக்குநரின் கோமியம் குறித்த பேச்சு மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். கோமியம் உடல் நலத்துக்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை உடனடியாக நீக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் ஆகியோரும் காமகோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காமகோடி விளக்கம்: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆராய்ச்சி கட்டுரைகளில் இதுதொடர்பான தகவல்கள் உள்ளன.

அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான பண்புகள் நிறைய உள்ளன என்பது குறித்து அமெரிக்காவின் நேச்சர், என்ஐஎச் ஆராய்ச்சி கட்டுரைகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

தற்போது கோமியம் தொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன். இப்போது, இயற்கை மருத்துவமுறை மிகவும் பிரபலமாகி வருகிறது. ஐஐடியில் மருத்துவ தொழில்நுட்பத்துறை இயங்கி வருகிறது. எந்த பேராசிரியராவது கோமியம் குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்பினால் தாராளமாக அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.