சச்சின், ரோகித் இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மகத்தான வீரர் அவர்தான் – கங்குலி பாராட்டு

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேவேளை எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் நிச்சயம் வலுவான கம்பேக் கொடுப்பார் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர், அதற்கடுத்த போட்டிகளில் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தனது விக்கெட்டை தொடர்ந்து தாரைவார்த்தார். இது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20) வரலாற்றில் மகத்தான வீரர் என்று சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியது தமக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஆண்கள் கிரிக்கெட்டில் விராட் கோலி வாழ்வில் ஒரு முறை மட்டும் வரக்கூடிய வீரர் என்று நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்கள் அடித்த அவருடைய கெரியர் நம்ப முடியாதது. என்னைப் பொறுத்த வரை அவர் இந்த உலகம் கண்ட மகத்தான வெள்ளைப்பந்து வீரர் ஆவார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சதத்தை அடித்த பின்பும் அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு முன்பு ஒரு வருடம் தடுமாறிய அவர் முதல் போட்டியில் சதத்தை அடித்ததால் அந்தத் தொடர் முழுவதும் அசத்துவார் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடப்பது சகஜம். ஒவ்வொரு வீரர்களுக்கும் பலம் பலவீனம் இருக்கும். அது இல்லாத வீரர்களே உலகில் இருக்க முடியாது.

எனவே இப்போதும் விராட் கோலியிடம் நிறைய கிரிக்கெட் இருப்பதாக நான் கருதுகிறேன். அடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் அவருடைய பார்ம் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் அத்தொடரில் உள்ள சூழ்நிலைகளில் ரன்கள் அடிப்பார்” எனக் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.