மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் தாக்குதல் சம்பவத்தில் குற்றக்காட்சியை மீண்டும் உருவாக்க கைது செய்யப்பட்டிருக்கும் குற்றம்சாட்டப்படவரை போலீஸார் நடிகரின் வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அழைத்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 20 பேர் அடங்கிய போலீஸ் குழு, குற்றம்சாட்டப்பட்ட நபரை சயிப் அலிகானின் இல்லமான சத்குரு ஷரன்-க்கு அழைத்து சென்றது. அங்கு அந்தகுழு ஒரு மணிநேரம் வரை இருந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஷரிஃபுல் இஸ்லாம் ஷஹ்சாத் முகம்மது ரோகில்லா அமின் ஃபகிரை முன்வாசல் வழியாக நடிகரின் வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தாதருக்கு செல்ல ரயில் ஏறிய பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து தாக்குதலுக்கு பின்பு தங்கிய பூங்காவுக்கும் அழைத்து சென்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர், குற்றச்சம்பவத்துக்கு பின்பு தப்பியோடிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காட்சிகள் மீண்டும் உருவாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஷஹ்சாத் மீண்டும் பாந்திரா காவல் நிலையம் அழைத்து வரப்பாட்டார். அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துவார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை அவரின் வீட்டில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார், ஷரிஃபுல் இஸ்லாம் ஷஹ்சாத் முகம்மது ரோகில்லா அமின் ஃபகிர் என்பவரை மத்தியப் பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். பாந்திராவில் உள்ள பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், குற்றம்சாட்ட நபருக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது.