புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் முதல் முதுகலை வரை தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,
யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு ரூ.15,000 உதவித் தொகை முதல் இரண்டு முயற்சிகள் வரை வழங்கப்படும். பீம்ராவ் அம்பேத்கர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் நல வாரியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.