திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தேவஸ்தானம் கடந்த 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து 42 வருடங்களாக பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அன்னதானம் வழங்கி வருகிறது. அன்னதானத்தில் நாள்தோறும் வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொறியல், சட்னி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பரிமாறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில், 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். இதற்கு பக்தர்கள் திருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, வரும் பிப்., 4ம் தேதி ரத சப்தமி முதல் அனைத்து பக்தர்களுக்கும் மசால் வடை பிரசாதம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.