திருப்பதி மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அலிபிரியில் இருந்து ஒரு பாதையும், அங்கிருந்து திருப்பதிக்கு வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1944-ம் ஆண்டு முதல் பாதை அமைக்கப்பட்டது. இது 19 கி.மீ தூரம் கொண்டதாகும். இது திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மலைப்பாதை கடந்த 1974-ல் அலிபிரி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 3200 அடி உயரத்தில் திருமலை உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பாதைகள் அதிக வளைவுகள் கொண்டதாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. திருமலையின் 2-வது மலைப்பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 விபத்துகள் நடந்தன. இதில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன ராவ் என்பவர் தனது குடும்பத்தாருடன் காரில் திருமலைக்கு சென்று சுவாமியை தரிசித்து விட்டு, மீண்டும் திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, 7-வது மைல் அருகே கார் தடுப்புசுவர் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினாலும் ஹர்ஷவர்தன் எனும் சிறுவம் காயம் அடைந்தார். இதுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-வது மைல் அருகே ஆந்திர அரசுப் பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். திருமலை பாதையில் தற்போது அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.