இந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கூறியதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரு பினாகா வகை ராக்கெட்கள் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் நடப்பு நிதியாண்டுக்குள் கையெழுத்தாகும். இதில் ஒரு ஒப்பந்தம் ரூ.5,700 கோடிக்கும் மற்றொரு ஒப்பந்தம் ரூ.4.500 கோடிக்கும் கையெழுத்தாகும்.
இந்த கொள்முதல் ராணுவத்தின் 10 பினாகா ரெஜிமென்ட்களுக்கு வலிமை சேர்க்கும். சீனாவுடனான வடக்கு எல்லையில் தற்போது 4 பினாகா படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. விரைவில் மேலும் 6 பினாகா பிரிவுகள் செயல்படத் தொடங்கும்.
உலகின் மிகச் சிறந்த ராக்கெட் அமைப்புகளின் ஒன்றாக பினாகா உள்ளது. உயர்ந்த மலைப் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடத்த ஏற்றது. 45 கி.மீ. மற்றும் 75 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்கள் உட்பட பல்வேறு ராக்கெட்களை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்களை 120 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.