ஹைதராபாத்: அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹைதராபாத் ஆர்கே புரம் கிரீன்ஹில்ஸ் காலனியைச் சேர்ந்த சந்திரமவுளியின் மகன் ரவிதேஜா (28). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2022-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றார். மேற்படிப்பு முடிவடைந்த நிலையில், அங்கேயே வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவிதேஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவிதேஜா இறந்த செய்தி, ஹைதராபாத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அவர்கள் கதறி அழுதனர். ரவிதேஜாவின் உடலை ஹைதராபாத் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிகாகோவில் தெலங்கானாவைச் சேர்ந்த சாய்தேஜ் (22), அட்லாண்டாவில் டாக்டர் ஸ்ரீராம் சிங் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.