Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!

மீசை இருந்தால்தான் ஆண் மகன் என இன்னும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ‘மொழுமொழு’ பாலிவுட் ‘கான்’கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிலருக்கு மீசை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், ஒரு முடிகூட வளராமல் இருக்கும். ஒருவருக்கு மீசை, தாடி வளராததற்கு என்ன காரணம் என திருச்சியைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பியல் நிபுணர் ஸ்ரீராம் மகாதேவனிடம் கேட்டோம்.

தாடி

”பூப்படைதல் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும்தான். ஆனால், ஆண்கள் பூப்படைவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். பொதுவாக, ஆண்களுக்குக் குரல் மாறுவது, அரும்பு மீசை வளர்வது மட்டுமே பூப்படைந்ததற்கான அறிகுறிகள் கிடையாது. விந்துப்பையின் அளவை வைத்தும் ஒரு ஆண்மகன் பூப்படைந்தாரா, இல்லையா எனக் கண்டுபிடிக்க இயலும். ஆர்கிடோமீட்டர் என்னும் இயந்திரத்தின் உதவியுடன்தான் விந்துப்பையின் அளவைக் கண்டுபிடிக்க இயலும். இதில் இருந்து சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்தான் முடியின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்க, கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

உடலில் உள்ள முடியின் வேர்கள் அனைத்திற்கும் ஒரு பூட்டு இருக்கும். இந்தப் பூட்டைத் திறந்தால்தான், முடி வெளியே வரும். இந்தப் பூட்டைத் திறக்கும் சாவிதான், டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து வேரில் இருந்து முடியை வளரச் செய்கிறது. ஒருவருக்கு மீசை, தாடி வளரவில்லை என்றால் அவருக்கு டெஸ்டோஸ்டீரான் சுரக்கும் அளவு குறைவாக இருக்கும் அல்லது வேரில் உள்ள ஓட்டைத் திறக்கப்படாமல் இருக்கலாம். இதனைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறிய வேண்டும்.

டெஸ்டோஸ்டீரான்

ஹார்மோன் சரியாக சுரக்கவில்லை என்றால், அந்த நபர் எவ்வளவு வயதானாலும் உடலின் மார்பு, அக்குள், முகம் என எந்த இடத்திலும் முடி வளராது. தவிர, அவருக்கு விதைப்பையின் அளவும் சிறியதாக இருக்கும். இப்படி, ஹார்மோன் பிரச்னை பண்ணுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. விரையில் அடிபடுதல், அடிபட்டு வீங்கிப்போதல், விரையில் வேறு ஏதேனும் பிரச்னை உண்டாகுதல் போன்றவை. 2. பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் LH, FSH ஹார்மோன் அளவு குறைந்து காணப்படும்.

இந்தப் பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு காண, தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேண்டும். பரிசோதனைகளின் முடிவுகளுக்கு ஏற்ப மருத்துவர்களின் அறிவுரைகளின் பேரில் ஊசி மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஹார்மோன் பிரச்னை

இந்த ஹார்மோன் பிரச்னை காரணமாக, ஓர் ஆண் தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி அற்றவனாக இருந்தாலும், அதற்கான ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி சுரக்க வைக்கலாம். ஆனால் ஓர் ஆணுக்கு தாம்பத்தியம், குழந்தைப்பிறப்பு எல்லா ஆண் தன்மையும் இருந்து முகத்தில் மீசை, தாடி வளரவில்லை என்றால், அந்த இடங்களில் உள்ள முடியின் வேர்களில் உள்ள பூட்டை, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனால் திறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் இதற்கென உள்ள மருத்துவரை நாடுங்கள்” என்கிறார் டாக்டர் ஸ்ரீராம் மகாதேவன்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/JailMathilThigil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.