இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ள ஷமிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடுவது தொடர்பாக பேசிய ஷமி, ” “நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற பசி எப்போதும் நிற்கக்கூடாது என்று நான் கருதுகிறேன்.
அந்த பசி உங்களிடம் இருக்கும் வரை எவ்வளவு முறை காயங்களை சந்தித்தாலும் உங்களால் மீண்டும் போராடி வர முடியும். எவ்வளவு போட்டிகள் விளையாடினாலும் அது எனக்கு குறைவானதாகவே தோன்றுகிறது. ஏனெனில் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்டால் எனக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது.
எனவே என்னுடைய கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட நான் விரும்புகிறேன். நாட்டுக்காகவும் மாநிலத்துக்காகவும் விளையாடிய வீரர்கள் காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.
அதனால் காயத்தை சந்திக்கும் போதெல்லாம் எப்போது மீண்டும் விளையாடுவோம் என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.