வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும், வெளியிட்ட அறிவிப்புகளும் கவனம் ஈர்த்துள்ளன.
78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக பதவியேற்றார். ‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது’ என அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய தனது முதல் உரையில் தெரிவித்தார். அதற்காகவே கடவுள் தனது உயிரை காத்துள்ளார் என தனது உணர்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
> கடந்த 2021-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது போலீஸ் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இந்நிலையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான சுமார் 1,600 பேருக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
> அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், அது தொடர்பாக தேசிய அவசர நிலையாக அறிவித்து, அந்த உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
> அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை குறைந்தது நான்கு மாதங்கள் வரை நிறுத்தி வைக்கவும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். ‘அதிக அளவில் புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்கும் திறன் அமெரிக்காவுக்கு இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
> முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் அமல் செய்யப்பட்ட சுமார் 78 நடவடிக்கைகளை புதிய அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.
> அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்கள் தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
> எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினருக்கு முந்தைய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
> பைடன் ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஓஇசிடி வரி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்திலும் ட்ரம்ப் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
> அமெரிக்காவின் வெளிநாட்டு மேம்பாட்டு உதவித் திட்ட பொறுப்பாளர்களாக உள்ள அனைத்து துறை மற்றும் நிறுவனத் தலைவர்களும் உடனடியாக மேம்பாட்டு நிதி உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
> உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போதும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பைடன் அதிபர் ஆனதும் அதில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது. தற்போது அமெரிக்கா அதிலிருந்து மீண்டும் வெளியேறி உள்ளது.
> பிப்ரவரி 1-ம் தேதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அதே நேரத்தில் சீனாவுக்கு 60 சதவீத வரி விதிப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
> பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டும் அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
> அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதைத் தொடர்ந்தால் தனது தலைமையிலான நிர்வாகம் அதே அளவிலான வரியினை இந்திய பொருட்களின் மீது விதிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.