வாஷிங்டன்: வாஷிங்டனில் திங்கள்கிழமை நடந்த அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு பிரார்த்தனைக் கூட்டத்தில், வாஷிங்டனின் ஆயரான வலதுசாரி பிஷப் மரியன் எட்கர் பட்டே, “எல்ஜிபிடிக்யூ மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்” என்று நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
தனது 15 நிமிட பிரசங்கத்தில் மரியன் பட்டே கூறுகையில், “அதிபர் அவர்களே, இறுதியாக நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். லட்சக்கணக்கானோர் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நேற்று நீங்கள் நாட்டுக்குச் சொன்னது போல, அன்புமிக்க கடவுளின் தெய்வீக கரத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். நமது கடவுளின் பெயரால், தற்போது அச்சத்தில் உள்ள நமது நாட்டின் மக்கள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள், ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களில் உள்ள தன்பாலீர்ப்பாளர்கள், திருநங்கைகள். அவர்களில் சிலர் உயிரச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், அதிபர் பதவியேற்பு விழா பிரசங்கத்தில் பேசிய மரியன் பட்டே, “மக்களின் ஒற்றுமைக்காக, தேசத்துக்காக பிரார்த்தனை செய்ய இங்கே கூடியிருக்கிறோம். மாறாக ஓர் உடன்பாட்டுக்காகவோ, அரசியலுக்காகவோ இல்லாமல் பன்முகத்தன்மை மற்றும் பிரிவினைக்கு அப்பால் சமூகத்தை வளர்க்கும் ஒற்றுமைக்காக கூடியிருக்கிறோம். ஒற்றுமை என்பது பிரிவினையாகாது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கெனவே பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பிருந்திருந்தது. எல்ஜிபிடிக்யூ-வினருக்கான உரிமைகளை திரும்பப் பெறுதல், அமெரிக்க குடியுரிமை கொள்கைகளைக் கடுமையாக்குதல் போன்றவை அடங்கும். இதனிடையே, வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்பிடம் பிரசங்கம் குறித்து கேட்டபோது, “அவ்வளவு உற்சாகமாக இல்லை, இல்லையா? இதுவொரு நல்ல பிரசங்கம் என்று நான் கருதவில்லை. இதைவிடச் சிறப்பாக செய்திருக்க முடியும்” என்று தெரிவித்தார்.
சரி… ட்ரம்பின் கோட்டையில் அவருக்கே நேரடியாக வேண்டுகோள் விடுத்த பிஷப் மரியன் பட்டே யார்? – கொலம்பியா மாவட்டம் மற்றும் நான்கு மேரிலேண்ட் நாடுகளில் உள்ள 86 ஆயர் சபைகள் மற்றும் 10 ஆயர் பயிற்சி பள்ளிகளுக்கு ஆன்மிகத் தலைவராக உள்ளார் மரியன் எட்கர் பட்டே. வாஷிங்டன் டயோசீசன் ஆயர் இணையதளத்தின் தகவலின்படி, 65 வயதான பெண் பிஷப் மரியன், துப்பாக்கி கலாச்சர தடுப்பு, இன சமத்துவம், குடியேற்ற சீர்திருத்தம், எல்ஜிபிடிக்யூ நபர்களை சமூகத்துடன் உள்ளடக்குவதற்கான சட்டப்பூர்வமான ஆதரவு குரலுக்காக அறியப்படுகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள புனித ஜான் தேவாலயத்தின் முன்பு ட்ரம்ப் வந்ததற்காக மரியன் மிகவும் கோபமடைந்தார். ட்ரம்ப்பால், அங்கு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதேபோல், கடந்த 2021, ஜன.6-ம் தேதி நடந்த கேபிடல் சம்பவத்துக்கு காரணமான ட்ரம்ப்பின் தீவிரவாத சொல்பிரயோகத்தை மரியன் கடுமையாக கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.