வாஷிங்டன் டி.சி.,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், உக்ரைன் பதிலடி கொடுத்து அவற்றை பின்னர் மீட்டது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவின் ஆதரவும் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் உக்ரைன் போர் பற்றி கூறும்போது, நாங்கள் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறோம். புதினிடமும் விரைவில் பேச உள்ளோம் என்றார்.
ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டால், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் கூறினார்.
ரஷியாவுக்கு எதிராக ஏற்கனவே, பெரிய அளவில் அமெரிக்கா தடைகளை விதித்து இருக்கிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரம் பற்றி குறிப்பிட்ட அவர், தன்னுடைய நிர்வாகம் அதனை கவனத்தில் கொண்டிருக்கிறது என்று டிரம்ப் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த தலையிடும்படி சீன அதிபர் ஜின்பிங்கிடம், தொலைபேசி வழியே பேசும்போது அழுத்தி கூறினேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.