புதுச்சேரி,
சென்னை மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஆழ்கடல் பயிற்சி நிறுவனத்தில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட தீபிகா, சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பாரா கிளைடிங் செய்து தனது காதலர் ஜான் டி பிரிட்டோவிடம் காதலை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து தீபிகா மற்றும் ஜான் டி பிரிட்டோ ஜோடி, கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆழ்கடலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர்.
இதன்படி, புதுச்சேரி கடல் பகுதியில் 50 அடி ஆழத்தில், அலங்காரம் செய்யப்பட்டு திருமண கோலத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து தீபிகா-ஜான் டி பிரிட்டோ ஜோடி கூறுகையில், ஆழ்கடல் திருமணத்திற்கு சுமார் 40 நிமிடங்கள் வரை ஆனதாகவும், ஆழ்கடல் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.