கோவையில் ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ பாதிப்பு அதிகரிப்பு – குழந்தைகள் நலன் காக்க மருத்துவர்கள் கைடன்ஸ்

கோவை: கோவை மாவட்டத்தில் ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய குழந்தை மருத்துவ குழுமத்தின்(ஐஏபி) தமிழ்நாடு கிளை தலைவர் மருத்துவர் கே.ராஜேந்திரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைக்கு வருவோர் மற்றும் அதன் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சங்கம் சார்பில் மக்களிடம் குளிர்காய்ச்சல்(இன்ப்ளூயன்சா வைரஸ்) தாக்கத்தை குறைக்கவும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாநில அளவில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

‘இன்ப்ளூயன்சா வைரஸ்’-ல் ஏ,பி,சி என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ வைரஸ் பருவகால தொற்றுக்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.

தும்மும் போது காற்றில் பரவும் துகள்களால் மிக வேகமாக பரவும்.மேலும் நிமோனியா போன்ற மூச்சுக்குழாய் நோய்கள், சிறுவர்கள் மத்தியில் செவித்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோயாளிகள் வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் மூலம் கழுவுதல். முக கவசம் அணிவது. நோய்த்தொற்றுடன் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்ப்பது, தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்றவை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். முறையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பொதுத் தடுப்பூசி திட்டம், பல நோய்களை கட்டுப்படுத்த சாதனை படைத்துள்ளது. ஆனால், இன்ப்ளூயன்சா தடுப்பூசி, அரசின் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வது சிரமமாக உள்ளது.

எங்கள் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு, தனியார் அமைப்புகளுடன் இணைந்து கிராமப்புறங்களில் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து கடைகளில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது. மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விழிப்புடன் செயல்பட்டால் நோயின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.