சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதத்தை அழிக்க மாநில காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த படையில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். சத்தீஸ்கர் காவல் துறையின் டிஆர்ஜி படை மற்றும் மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 1,000 வீரர்கள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய அண்மைக்காலமாக ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ட்ரோன் கண்காணிப்பின்போது சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்ட வனப்பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இந்த வனப்பகுதி ஒடிசா எல்லைக்கு அருகே அமைந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் ஒடிசா காவல் துறையின் உதவி கோரப்பட்டது. ஒடிசா காவல் துறையை சேர்ந்த 3 சிறப்பு படைகள், சத்தீஸ்கர் காவல் துறையின் 2 சிறப்பு படைகள், சிஆர்பிஎப் பிரிவை சேர்ந்த 5 சிறப்பு படைகள் இணைந்து சத்தீஸ்கரின் கரியாபந்து வனப்பகுதியை கடந்த திங்கள்கிழமை சுற்றி வளைத்தன.
திங்கள்கிழமை பிற்பகலில் இருதரப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் சிஆர்பிஎப் படையை சேர்ந்த புதிய வீரர்கள் கரியாபந்து வனப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 27 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் நக்சல் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரெட்டி (60) என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
50 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு: என்கவுன்ட்டர் குறித்து சத்தீஸ்கர் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை முதல் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. முதலில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். தற்போது சுமார் 3 கி.மீ. சுற்றளவில் நக்சல் தீவிரவாதிகள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நடமாட்டம் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால் எங்கும் தப்பியோட முடியாது. 12 மணி நேரத்துக்கும் மேலாக சண்டையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் அனுப்பப்படுகின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றி வருகிறோம். இதுவரை 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 16 பேரின் சடலங்களை கைப்பற்றி உள்ளோம். சுமார் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து என்கவுன்ட்டர் நடைபெறுவதால் நக்சல் தீவிரவாதிகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். பாதுகாப்புப் படையில் ஒரு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு சத்தீஸ்கர் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் அமித் ஷா உறுதி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஒடிசா, சத்தீஸ்கர் காவல் துறை, சிஆர்பிஎப் படை இணைந்து ஒடிசா- சத்தீஸ்கர் எல்லையில் மிகப்பெரிய என்கவுன்ட்டரை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். நக்சல் தீவிரவாதத்தை அழிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. நக்சல் தீவிரவாதம் இல்லாத புதிய இந்தியா விரைவில் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று கூறியதாவது: என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படை வீரர்களின் வீரத்தை பாராட்டுகிறேன். கடந்த ஓராண்டாக நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக பாஜக அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறும்போது, “கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 220 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் மூத்த தலைவர் உயிரிழப்பு: ஆந்திராவின் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் ரெட்டி (60). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள அவர் இளம் வயதிலேயே நக்சல் இயக்கத்தில் இணைந்தார். தற்போது நக்சல் அமைப்பின் மூத்த தலைவராக அவர் செயல்பட்டு வந்தார். சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ஜெயராமும் அவரது குழுவினரும் முகாமிட்டு இருந்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதால் ஜெயராம் ரெட்டி ஒடிசா எல்லை அருகே உள்ள சத்தீஸ்கரின் கரியாபந்து வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.
அவரிடம் ஏகே 47 துப்பாக்கிகள் இருந்தன. அவரது பாதுகாப்புக்காக சுமார் 10 நக்சல் தீவிரவாதிகள் எப்போதும் உடன் இருப்பர். தற்போதைய என்கவுன்ட்டரில் ஜெயராம் ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இது நக்சல் தீவிரவாத அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும் என்று சத்தீஸ்கர் காவல் துறை தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலில் தொடர்புடையவர்
என். மகேஷ்குமார்
ஹைதராபாத்: 2003 அக்டோபர் 1-ம் தேதி அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி பிரம்மோற்சவத்துக்காக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க காரில் சென்றார். அலிபிரி மலைப்பாதையில் அவரது கார் சென்றபோது நக்சல் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கண்ணிவெடி தாக்குதலில் நக்சல் மூத்த தலைவர் ஜெயராம் ரெட்டி என்ற சலபதிக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திர போலீஸார் குற்றம் சாட்டினர். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் அவர் சத்தீஸ்கர் மலைப்பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தற்போதைய என்கவுன்ட்டரில் அவர் உயிரிழந்திருக்கிறார். அலிபிரி கண்ணிவெடி தாக்குதலில் தொடர்புடைய மனோஜ், குட்டு ஆகியோரும் என்கவுன்ட்டரில் உயிரிழந்து உள்ளனர்.