புதுடெல்லி: டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டெல்லி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி ஆன்லைனில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது அடித்தளத்தை இழந்து வருகிறது. அக்கட்சி மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. அதனால்தான் அவர்கள், தினமும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆம் ஆத்மியை தோற்கடிக்க சாதனை அளவில் வாக்குப்பதிவு நடப்பதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 50% க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை மக்கள் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்கள். அக்கட்சியை அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதன் வாக்குறுதிகளை நினைவூட்டுகிறார்கள்.
டெல்லியில் மது கிடைக்கிறது, ஆனால் குடிநீர்தான் இல்லை. கேஜ்ரிவாலின் ‘வசந்தமாளிகை’ ஆம் ஆத்மியின் வஞ்சகம் மற்றும் அதன் பொய்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்குச்சாவடி ஊழியர்களின் பலம் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.
பெண்கள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை நம்பவில்லை. இமாச்சலப் பிரதேச பெண்கள் போராடி வருகின்றனர். பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு பணம் தருவதாக உறுதியளித்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.
ஆம் ஆத்மி பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி. ஆனால், பாஜக உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் சொல்வதை நாம் நிறைவேற்றுகிறோம். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில், பல்வேறு திட்டங்களின் கீழ் பெண்களுக்கு பணம் தருவதாக உறுதியளித்தோம், அதை நிறைவேற்றினோம்.
நாட்டில் இளைஞர்களின் சக்தி மிகவும் முக்கியமானது. கடந்த பத்து ஆண்டுகளில், ஸ்டார்ட் அப்கள், நிறுவனங்கள் மற்றும் பிற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். ஆனால் டெல்லியில், ஆம் ஆத்மி இளைஞர்களை ஏமாற்றி வருகிறது.
டெல்லி இளைஞர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த முறை அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள். ஆம் ஆத்மியின் பொய்களால் அவர்கள் சோர்வடைந்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால், பாஜக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். டெல்லியை ஸ்டார்ட்அப் ஹப் ஆக பாஜக மாற்றும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நிறைய செய்திருப்பது போல் ஆம் ஆத்மி பேசி வருகிறது. ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்பது மக்களுக்குத் தெரியும். டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் பாஜக சரி செய்யும். அதனால்தான் நாம் நமது தேர்தல் அறிக்கையில், கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.