தொல்லியல் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘‘இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு, ஜன.23-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக’’ என பதிவிட்டிருந்தார்.
இப்பதிவை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘‘நாளை (ஜன 23) முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முழுமையான ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.