பாஜக அரசின் வரி தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், குழந்தை பெற்றுக் கொள்ளக் கூட தயங்குகின்றனர் என ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப் பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், சமூகத்தில் அதிகம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது:
சில தேர்தல் வாக்குறுதிகள், பின்தங்கிய மக்களுக்காகவும், சில வாக்குறுதிகள் சில தொழிலதிபர்களுக்காகவும் அளிக்கப்படுகின்றன. சில ஜாதி மற்றும் மதத்தினரை ஒட்டு வங்கிகளாக அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளன.
தொழிலதிபர்களிடம் இருந்து அரசுக்கு நன்கொடை தேவை. அதனால் அவர்கள் நோட்டு வங்கிகளாக உள்ளனர். ஓட்டு வங்கிக்கும், நோட்டு வங்கிக்கும் இடையே, ஒரு மிகப் பெரிய பிரிவு சாண்ட்விச் போல் சிக்கி தவிக்கிறது. அதுதான் நடுத்தர வர்க்கம்.
சுதந்திரத்துக்குப்பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரைத்தான் பிழிந்து எடுக்கின்றன. அரசுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையேயான உறவு விநோதமானது. நடுத்தர வர்க்கத்தினருக்காக அரசு எதையும் செய்வதில்லை. அரசுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம், குறிவைக்கப்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்கள்தான் அதிக வரி செலுத்துகின்றனர். ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. அரசின் ஏடிஎம் இயந்திரமாக நடுத்தர வர்க்கத்தினர் மாற்றப்பட்டுள்ளனர். வரி தீவிரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வர்க்கம்தான்.
இவர்களுக்கு பெரிய கோரிக்கைகள் எதுவும் இல்லை. நல்ல வேலை, சொந்த வீடு, குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பத்துக்கு சுகாதார பாதுகாப்பு போன்றவற்றைதான் நடுத்தர வர்க்கம் விரும்புகிறது. ஆனால் அரசு தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வசதிகளை அளிப்பதில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில்லை.
ஆனால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வருமானத்தில் 50 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்துகிறார். இந்த வரி தீவிரவாதத்துக்கு இடையே அவர்களால் எப்படி தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும்? நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளம் தம்பதியின் குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தையும், அவர்களின் நிதிநிலைதான் முடிவு செய்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ளும் முன்பே, தங்களால் அதை வளர்க்க முடியமா? என யோகிக்கின்றனர் என்பதுதான் உண்மை. நாம் எங்கே இருக்கிறோம்? இங்கு அதிக வரி செலுத்த வேண்டியிருப்பதால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
உண்மையான சூப்பர் சக்தியாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தை மத்திய அரசு அடையாள காண வேண்டும். வருகிற பட்ஜெட்டில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணத்துக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை வரி கூடாது. அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். வலுவான ஓய்வூதியம் திட்டங்களை கொண்டுவர வேண்டும். ரயில்களில் முதியோர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும்.
நடுத்தர மக்களின் கோரிக்கைகளை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். நடுத்தர மக்களுக்கு சலுகை அளிக்கும் ஒரே அரசு டெல்லி அரசுதான். அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளோம். தனியார் பள்ளி கட்டணத்தை குறைத்துள்ளோம். மின் கட்டணம், தண்ணீர் கட்டணத்தை குறைத்து பணவீக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.