திண்டுக்கல்: மத்திய பாஜக அரசுக்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியின் கடமை என்பதை மீண்டும்ம் ஒருமுறை நிரூபித்துள்ளார், என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது மத்திய பாஜக அரசு. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் 10 மாநிலங்களில் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் இதனால் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு மட்டும் 2024 டிசம்பர் 4 ம் தேதி முதல் இன்றுவரை நிதி வழங்கப்படவில்லை. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் மத்திய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நிதியை விடுவிக்காமல் இருந்துவருகிறது.
தமிழக முதல்வர் மத்திய பாஜக அரசின் இந்த நயவஞ்சக செயலை கண்டித்து உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.1056 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே பிரதமருக்கு கடிதம் எழுதி மத்திய பாஜக அரசை வலியுறுத்தி இருந்தார். நிதி ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முதலமைச்சர் கடிதம் எழுதிய போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்தாரா? ரைடு பயத்தால் பங்கருக்குள் பதுங்கி இருந்தாரா?
தமிழ்நாட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறும் பழனிசாமிக்கு ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது பற்றி தெரியாதா?
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை மட்டுமே வாடிக்கையாய் வைத்துள்ளார் பழனிசாமி. இதுவரை மத்திய பாஜக அரசை கண்டித்து ஒரு வார்த்தையாவது பேசி இருப்பாரா பழனிசாமி? அதற்கு அவருக்கு தைரியமிருக்கிறதா?
நிதியை ஒதுக்காத பாஜக அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கோபமாக இருப்பதை மடைமாற்ற டெல்லி போட்ட உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு மீது குறை சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு வாய்த்த அடிமை பழனிசாமி.
உண்மையாக தமிழ்நாட்டு வளர்ச்சியிலும் மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால், தொடர்ந்து தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டிவரும் பாஜக அரசுக்கு எதிராய் போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்.
பாஜகவோடு கள்ளகூட்டணி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் முதுகில் குத்திக்கொண்டு இருக்கும் பழனிசாமியால், ஒரு நாளும் பாஜக அரசிற்கு எதிராய் ஒருவார்த்தை கூட பேச முடியாது. அந்த கையாலாக தனத்தை மறைக்க தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சி மீது வீண் அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்” இவ்வாறு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.