தமிழ் சமூகத்தின் மதிப்புமிக்க ஓவியர்களில் ஒருவரான மாயா வயோதிகம் காரணமாக 98 வயதில் உயிரிழந்திருக்கிறார். மாயாவிற்கும் ஆனந்த விகடனுக்குமான தொடர்பு நீண்ட நெடியது. ஆனந்த விகடனின் வாசகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட பல தொடர்களுக்கும் ஓவியங்கள் மூலம் உயிரூட்டிய மாயாதான். நிறைவாக வாழ்ந்து இயற்கை எய்தியிருக்கும் மாயாவைப் பற்றி அவர் மகனான ராமசுப்ரமணியத்திடம் பேசினோம்.
‘அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே வரையுறதுனா ரொம்பப் பிடிக்கும். திருநெல்வேலில கோபாலசமுத்திரங்ற கிராமம்தான் அப்பாவோட ஊரு. அப்பவே பார்க்குறதெல்லாம் வரைஞ்சு பழகுவாராம். 16 வயசுல SSLC முடிச்ச உடனேயே ஓவியரா வேலையத் தொடங்கிட்டாரு. முதல்ல ‘பிக்சர் போஸ்ட்’ அப்டிங்ற பத்திரிகைலதான் வேலை பார்த்தாரு. 1950 களோட தொடக்கத்துலதான் ஆனந்த விகடனுக்கு வந்திருக்காரு. விகடனுக்கும் அப்பாவுக்குமான பந்தம் எமோஷனலானது. எஸ்.எஸ்.வாசன், பாலசுப்ரமணியம்னு ரெண்டு பேரோடையும் ரொம்பவே நெருங்கி பழகியிருக்காரு.
இப்போதான் லே அவுட்டுக்கெல்லாம் தொழில்நுட்பம் நிறைய வந்திருக்கு. அப்போலாம் ஒவ்வொரு புக்குக்கும் கையாலயே டிசைன் பண்ணி ஒரு டம்மி பண்ணனும்.
பல ஆண்டுகளா ஆனந்த விகடனுக்கு அப்பாதான் டம்மி பண்ணிக் கொடுத்திருக்காரு. அதே மாதிரி அந்த சமயத்துல வந்த தொடர்கள் எல்லாத்துலயும் அப்பாவோட ஓவியம் அவ்வளவு உயிரோட்டமா இடம் பிடிச்சிருக்கும். ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, பரணிதரண், கோபுலு, சாவி, வாணின்னு பல பெரிய மனிதர்களோடயும் நெருங்கிப் பழகி அவங்க மனச புரிஞ்சு ஓவியம் வரைஞ்சு கொடுத்துருக்காரு.
1978 வரைக்கும் ஆனந்த விகடன்ல இருந்தாரு. அதுக்குப் பிறகு ‘இதயம் பேசியது’ பத்திரிகைக்கு வந்தாரு. ‘மாயா சித்ராலயா’ன்னு ஓவிய பயிற்சி பள்ளி ஒன்னு வச்சிருந்தாரு. ‘மாயா வெட்டிங் கார்ட்ஸ்’னு ஒரு பத்திரிகை கம்பெனி வச்சிருந்தாரு. அது கொரோனா வரைக்கும் ரன் ஆகிட்டு இருந்துச்சு. அவருக்கு எல்லாமே ஓவியம்தாங்க. காலைல 4:30 மணிக்கு எழுந்திருப்பாரு. அவருக்குன்னு ஒரு நற்காலி இருக்கும். அதுல உட்காந்தாருன்னா சாயங்காலம் 4:30 மணிக்குதான் திரும்ப எழுந்திருப்பாரு. 12 மணி நேரம் ஒரே இடத்துல உட்காந்து படம் வரையுற வேலைய மட்டுமே செய்யுற சக்தியும் உறுதியும் அவர்க்கிட்ட இருந்துச்சு. இந்தச் சமூகத்துல அவர் பார்க்குற விஷயங்களத்தான் ஓவியங்கள் ஆக்கினாரு. அதனால்தான் அந்த ஓவியங்கள் மக்கள் மனசுல நிலைச்சு நின்னுச்சு.
பல தரப்போட பாராட்டுகளையும் சம்பாதிச்சு. தமிழகத்தின் ஆக்கச்சிறந்த ஓவியர்களில் ஒருவராவும் கொண்டாடப்படுறாரு. ஆனா, இது எதுவும் அவருக்கு தேவையே இல்ல. இதைப்பற்றியெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. அவருக்கு படம் வரையணும் அவ்வளவுதான். வரையுறது மட்டும்தான் அவருக்கு முழு சந்தோஷத்தை கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு அந்தப் படம் பப்ளிஷ் ஆகுறது பாராட்டு பெறுறது இதெல்லாம் அவருக்கு ஒன்னுமே இல்லை. கடைசி வரைக்கும் கையால வரையுறத அவ்வளவு நேசிச்சாரு.
ஓவியர் ஷ்யாம் கூட போன்லயே ஓவியம் வரையுறது எப்டின்னு அப்பாவுக்கு சொல்லிக்கொடுத்தாரு. ஆனா, அப்பாவுக்கு அது ஒட்டவே இல்லை. மணிக்கணக்கா உட்காந்து கைலயே வரையுறததான் அவர் விரும்பினாரு. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க இவ்வளவு வயசு ஆன பிறகும் அவருக்கு கை நடுக்கமே ஏற்படல. அந்தளவுக்கு அவருடைய கை ஓவியத்துக்கான நுட்பத்தை பழகியிருக்கு. பட்டம், பாராட்டு, கௌரவம் என எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து வரைந்தால் அது மட்டுமே போதும். அதை கடைசி வரை செய்துவிட்டு நிறைவாக சென்று சேர்ந்திருக்கிறார்.’ என்றார்
போய் வாருங்கள் மாயா சார்!