Q&A கோமியம் : உண்மையிலேயே மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா? ஆயுர்வேத மருத்துவம் சொல்வதென்ன?

ஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி ‘கோமியம்’ குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், “மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்” என்று அதை இன்னமும் ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார், பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக, ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் பேசினோம்.

representational

`கோமியம் என்றால் என்ன?’

`பசுவின் சிறுநீரை இவர்கள் ‘கோமியம்’ என்று சொல்வதே சரியானதல்ல. பசுவின் மலத்தைத்தான், அதாவது சாணத்தைத்தான் சமஸ்கிருதத்தில் கோமியம் என்போம். ‘கோமூத்திரா’ என்பதுதான் பசுவின் சிறுநீரைக் குறிக்கும் வார்த்தை.’

`பசுவின் சிறுநீரைப் பிடித்து அப்படியே அருந்த வேண்டுமா… ஆயுர்வேதம் மருத்துவம் சொல்வதென்ன?’

“அப்படி செய்யவே கூடாது. ஆயுர்வேதம் மருத்துவம் அப்படி சொல்லவில்லை. ஆயுர்வேத மருந்துக்கலவைகளில் பசுவின் சிறுநீரும் ஒன்று என்றுதான் அது சொல்லியிருக்கிறது.”

ஐஐடி காமகோடி

` ‘கோமூத்திரா’வில் நிஜமாகவே மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா?’

`பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவ புத்தகங்களில் கூறப்பட்டிருப்பது உண்மைதான். பலவிதமான ஆயுர்வேத மருந்துகளுடன் பசுவின் சிறுநீரையும் ஒரு மருந்துப்பொருளாக பயன்படுத்துகிறோம். சில தனிமங்களை சுத்தப்படுத்தி மருந்துகளில் பயன்படுத்தவும் பசுவின் சிறுநீரை பயன்படுத்துகிறோம்.’

`பசுவின் சிறுநீர் என்னென்ன மருந்துகளில் சேர்க்கப்படுகிறது?’

`பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கோமூத்ரா ஹர்தகி’ என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பசுவின் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே `பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும் ((Enema)) பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக இருக்கிற சில பிரச்னைகளுக்கு, உதாரணமாக மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு கொடுக்கப்படுகிற மருந்துகளில் பசுவின் சிறுநீரும் பயன்படுத்தப்படுகிறது. சரும வியாதிகளுக்கான வெளிப்புறப்பூச்சு மருந்துகளிலும் கோ மூத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.’

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

`பசுவின் சிறுநீர் சேர்க்கப்பட்ட மருந்துகளை அனைவருக்கும் கொடுப்பீர்களா?’

`மாட்டோம். ஏனென்றால், கோ மூத்திரத்திரம் வெப்பத்தன்மை கொண்டது. அதனால், வெப்பத்தன்மை மிகுந்த உடல்வாகு கொண்டவர்களுக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண் என்று இருப்பவர்களுக்கும் தர மாட்டோம்.’

`பசுவின் சிறுநீரை மட்டும்தான் பயன்படுத்துவீர்களா?’

“பசுவின் தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. தவிர, வெள்ளாடு, செம்மறியாடு, எருமை, ஒட்டகம், யானை, குதிரை, கழுதை ஆகிய உயிரினங்களின் சிறுநீரிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் உள்ளன. மருந்து என்று சொல்லும்போது, தாவரங்களுக்கு இடப்படுகிற எருகூட மருந்துதான். இந்த எருவை மலத்தில் இருந்தும் தயாரிக்கிறார்களே… இந்த உலகத்தில் மருந்துக்குப் பயன்படாத பொருள்களே இல்லை என்கிறது ஆயுர்வேதம்.”

பசு பாதுகாப்பு நிலையம் கோ சாலை

“இந்தக்கால பசுக்களின் சிறுநீரிலும் ஆயுர்வேதம் குறிப்பிடும் அந்த மருத்துவ குணம் இருக்குமா?”

“அது சந்தேகம்தான். அந்தக் காலத்தில் இருந்த பசுக்கள் பசும் புற்களை மேய்ந்தன. இன்றைய பசுக்கள் போஸ்டரை தின்று பசியாறுகின்றன. அன்றைக்கு நிலம் மாசுபடவில்லை. அதில் முளைத்த புற்களும் சத்து நிரம்பி இருந்தது. இன்றைக்கு நிலமெல்லாம் மாசுப்பட்டுப்போய் கிடக்கின்றன. இதில் முளைத்த புல்லைத் தின்றாலும் பலனில்லைதான். இந்தவகையில் பார்த்தால், அன்றைக்கு கிடைத்த தரத்தில் இன்றைக்கு பாலே கிடைக்காதே…”

“எல்லா பசுக்களின் சிறுநீரையும் பயன்படுத்துவார்களா?”

“முதலில் அந்த பசு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். தவிர, பசுவின் நிறத்துக்கேற்பக்கூட அதன் சிறுநீரின் குணாதிசயம் மாறுபடும் என்று ஆயுர்வேதம் கூறியிருப்பதால், எல்லா பசுக்களின் சிறுநீரையும் பயன்படுத்த முடியாது.”

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

“ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கென பசுக்களை வளர்பார்களா?”

“பசுவின் பாலை வைத்து நிறைய மருந்துகளை தயாரித்த காரணத்தால், ஒருகாலத்தில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகள் பசுக்களை பராமரிக்கும் ‘கோ சாலை’யும் வைத்திருந்தார்கள். இப்போதைய நிலைமையை திட்டவட்டமாக கூற முடியவில்லை. ”

`பசுவின் சிறுநீரை எப்படி சுத்தம் செய்வீர்கள்? ’

“காலை, மாலை நேரங்களில் சேகரிக்கப்படும் பசுவின் சிறுநீரில் மட்டுமே மருத்துவக் குணங்கள் முழுமையாக இருக்கும். அதுவும், முதலில் வரும் சிறுநீரையும், கடைசியாக வரும் சிறுநீரையும் பயன்படுத்தக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வரக்கூடிய சிறுநீரையே பயன்படுத்த வேண்டும். அப்படி சேகரிக்கப்பட்ட சிறுநீரை எட்டு மடிப்புகளாக மடிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் வடிகட்டியே பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் கால்நடைகளுக்குத் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பசுவின் சிறுநீர் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக ஈகோலை (E-COLI) போன்ற நோய்த்தொற்று எதுவும் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகே மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். தவிர, சேரிக்கப்பட்ட சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதித்தப் பிறகே பயன்படுத்த வேண்டும். சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத புத்தகத்தில் இருப்பனவற்றை தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று முடித்தார் கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.