Skin Health: மரு… அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா?

பெண்களின் சருமம் தொடர்பான பிரச்னைகளில் ஒன்று மரு. முகம், கழுத்து, விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால், அரிதாகப் பிறப்புறுப்பிலும் கூட மரு வரலாம். இவற்றுக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிச் சொல்கிறார் சரும மருத்துவர் வானதி.

“மரு உடலின் பல பகுதிகளில் வரும் என்றாலும், அதன் தன்மைக்கேற்ப அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சில வகை மரு வயதாவதால் வரும். சிலது குடும்பவாகு காரணமாக 20 வயதுகளில் இருப்பவர்களுக்குக்கூட வரலாம். மருக்களில் ஒருவகையான `டெர்மடோசிஸ் பாப்பிலோசா நைக்ரா’ (Dermatosis Papulosa Nigra – DPN), பார்ப்பதற்குக் கரும்புள்ளி மாதிரியும் சருமத்தில் ஒட்டி விட்டது போலவும் இருக்கும். சிலருக்கு வயது காரணமாக வரும். சிலருக்கு பரம்பரைத்தன்மை காரணமாகவும் வரும். இந்த வகை மருவை நீக்குவதற்கென க்ரீம் இருக்கிறது. லேசர் சிகிச்சையின் மூலமும் நீக்கி விடலாம். இதைச் சரும மருத்துவரிடம் செய்துகொள்வதே பாதுகாப்பு.

Skin Tag

அடுத்த வகை `ஸ்கின் டேக்’ (Skin Tag). இதற்கு வயது ஒரு காரணம் என்றாலும், பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கும் வரும். இவர்களுக்குச் சருமத்திலுள்ள மடிப்புகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டே இருப்பதால் ஸ்கின் டேக் வருவதற்கு வாய்ப்பு அதிகம். சிலருக்கு கழுத்து, அக்குள், தொடைப்பகுதி கருமையாகி, அந்தப் பகுதிகளிலும் ஸ்கின் டேக் வரும். பார்ப்பதற்குத் தொங்கிக்கொண்டிருப்பதுபோல இருக்கும். தொட்டுப் பார்த்தால் மிகவும் மென்மையாக இருக்கும். மெல்லிய வேர் இருக்கும். மரத்துப் போகிற க்ரீமை தடவியோ, ஊசி போட்டோ இதை நீக்கி விடலாம்.

மூன்றாவது வகையை ‘ஹெப்பரின்’ (Heparin) என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு சருமத்தில் ஒட்டிவைத்ததுபோல இருக்கும். மரத்துப்போகிற ஊசிபோட்டுப் பொசுக்கி இதை எடுத்துவிடலாம்.

மேலே சொன்ன மூன்று வகை மருக்களும் பெரிதாக பிரச்னைகளை ஏற்படுத்தாது. `ஹியூமன் பாப்பிலோமா’ வைரஸ் காரணமாக வருகிற நான்காவது வகையான மருதான் பிரச்னைக்குரியது. இதிலும் நிறைய வகைகள் இருக்கின்றன.

virus

உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வருவது ஒருவகை. இதிலும் சில மருக்கள் சருமத்தில் மேலோட்டமாகவும், சிலது ஆழமாகவும் வரும். சிலருக்குத் தட்டையாக வரும், சிலருக்குக் குட்டிக் குட்டியாகத் துருத்திக் கொண்டு இருக்கும். கிள்ளினால் மற்ற இடங்களுக்குப் பரவும். பொசுக்கி எடுத்தாலும், வைரஸ் சருமத்தின் உள்ளே சென்றுவிட்டால் மறுபடியும் வரும். இந்த வகை மருவை நீக்குவதற்கும் க்ரீம் இருக்கிறது. ஆனால், இந்த க்ரீமை மருவின் மேல் மட்டும் படும்படி அப்ளை செய்து, 4 மணி நேரம் கழித்து சுத்தமாகக் கழுவிவிட வேண்டும். மருக்கள் மெள்ள மெள்ளச் சுருங்கி உதிர்ந்துவிடும். அதே நேரம் இந்த க்ரீம், மருவைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டுவிட்டால் சருமம் புண்ணாகிவிடும். அதனால், மற்ற பகுதிகளில் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது ஸிங்க் க்ரீம் தடவிய பிறகே, மருவின்மீது இந்த க்ரீமை தடவ வேண்டும். கர்ப்பிணிகள் இந்த க்ரீமை பயன்படுத்தக் கூடாது.

சில பெண்களுக்குப் பிறப்புறுப்பின் `லேபியா மெஜோரா’ (Lebia Majora) பகுதியில் அரிதாக மரு வரும். இதை `ஜெனிட்டல் வார்ட்’ என்று சொல்வார்கள். பெரும்பாலும் இது பால் வினைத்தொற்று காரணமாக வரும். பாலுறவு காரணமாக ஜெனிட்டல் வார்ட் வந்திருப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அதை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அப்போதுதான் சரியான சிகிச்சையளிக்க முடியும். சிலருக்கு ஜெனிட்டல் வார்ட், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதை மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் கண்டறிந்து விடலாம்.

சருமநல மருத்துவர் வானதி

ஜெனிட்டல் வார்ட் இருந்து, அதோடு கருத்தரித்து விட்டால் பிறப்புறுக்குள் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கு மென்பதால் மரு சீக்கிரம் பெரிதாகி விடும். சுகப்பிரசவம் நடந்தால், அந்த வைரஸ், சிசுவின் குரல்வளைக்குள் சென்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். எனவே, மருதானே என அலட்சியம் செய்யாமல், அது வரும் இடத்தைப் பொறுத்து கவனமாக இருப்பது அவசியம்’’ என்கிறார் சரும மருத்துவர் வானதி.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.