Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? – அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் – ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் – சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் – சஹால் சூழல் கூட்டணியுடனே இந்திய அணி சென்றது. அந்த உலகக் கோப்பையில், ஜடேஜா அணியில் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டி உட்பட இரண்டு போட்டிகளில் அவர் மட்டுமே விளையாடினார்.

குல்தீப், சாஹல்

தொடர் முழுவதும், குல்தீப் – சஹால் கூட்டணி விளையாடியது. ஆனால், 2019 உலகக் கோப்பைக்குப் பின்னர் அணியிலிருந்து இருவருமே ஓரங்கட்டப்பட்டனர். 2021 டி20 உலகக் கோப்பையில் இருவருமே இடம்பெறவில்லை. 2021-க்குப் பிறகு ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சஹால், 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதனால், 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றாலும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. குல்தீப்பும் அந்த உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும், குல்தீப் கம்பேக் கொடுத்து 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடி முக்கிய பங்காற்றி, தற்போது அடுத்த மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

மறுபக்கம், 2023-ல் ஒன்பது சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தியதன் காரணமாகவும், 2023 ஐ.பி.எல் சீசனில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் காரணமாகவும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார் சஹால். ஆனால், இதிலும் ஒரு போட்டியில் கூட சஹால் களமிறக்கப்படவில்லை.

சஹால்

ஒருநாள் போட்டியைப் பொறுத்தளவில், கடைசியாக 2023 ஜனவரியில் இலங்கைக்கெதிராகவும், நியூசிலாந்துக்கெதிராகவும் தலா ஒரு போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி அணிக்கும் கண்டுகொள்ளப்படவில்லை. ஐ.பி.எல்லில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகத் திகழும் சஹால், தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சஹாலின் கரியர் பி.சி.சி.ஐ-யால் முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார். தனது யூடியூப் சேனலில் இதுபற்றி சஹால் பற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “சஹால் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டார். அவரின் ஃபைல் மூடப்பட்டுவிட்டது. அவர்கள் (BCCI) ஏன் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதில், சுவாரஸ்யமானது என்னவென்றால், கடைசியாக அவர் 2023 ஜனவரியில் விளையாடினார். அவர் விளையாடி இரண்டு ஆண்டுகள் (சர்வதேச கிரிக்கெட்) ஆகிவிட்டது.

சஹால்

இருப்பினும், அவரின் விக்கெட்டுகள் எண்ணிக்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அவரின் ஃபைல் மூடப்பட்டு இரண்டாண்டுகள் ஆகிவிட்டதால், திடீரென அணிக்குள் எடுத்தாலும் அது பின்னடைவாகத்தான் பார்க்கப்படும்.” என்று கூறினார்.

மறுபக்கம், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. 2017-ல், இதேபோன்ற இந்தியா vs இங்கிலாந்து தொடரில்தான், பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பான ஆட்டத்தைப் பதிவுசெய்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலிலும் 80 ஆட்டங்களில் 96 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

சஹால்

அவரைத்தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் 60 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்று தொடங்கும், இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருக்கும் அர்ஷ்தீப் சிங் இன்னும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சஹாலை எளிதாகப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடுவார்.

யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங்

அதுமட்டுமல்லாமல், இந்தத் தொடரில், குறைந்தபட்சம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டி20 வரலாற்றில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கக் கூடிய அரிய வாய்ப்பும் அர்ஷ்தீப் சிங் முன் இருக்கிறது.!

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.