அதிபர் ட்ரம்ப் உத்தரவு 30 நாளில் அமலுக்கு வருவதால் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன. இதில் சியாட்டிலில் உள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட இருக்கிறது.

அதிபர் ட்ரம்பின் முடிவு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறும்போது, “பிறப்பு குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிபரின் முடிவை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் சார்ந்த சமூக நல அமைப்புகள், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன” என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளை சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அமெரிக்கா முழுவதும் சிசேரியன் மூலமான குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: அதிபர் ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை வரும் பிப்ரவரி 19-ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்ள வெளிநாட்டு பெண்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

சிசேரியன் தொடர்பாக எனக்கு மட்டும் ஒரு நாளில் 20 கோரிக்கைகள் வருகின்றன. அமெரிக்க சட்டவிதிகளின்படி சிசேரியன் மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்ப மண்டல பாதிப்பு, எடை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவ்வாறு இந்திய வம்சாவளி மருத்துவர் தெரிவித்தார்.

நியூஜெர்ஸி அட்டர்னி ஜெனரல் மேத்யூ கூறும்போது, “அதிபர் ட்ரம்புக்கு அதிக அதிகாரங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மன்னர் கிடையாது. ஒரு கையெழுத்தால் அமெரிக்க அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அதிபரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடுவோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.