வாஷிங்டன்: அண்மையில் சில மணி நேர தடைக்கு பின்பு அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது டிக்டாக் செயலி. இதற்கு அதிபர் ட்ரம்ப் உதவினார். இந்த சூழலில் அமெரிக்க அரசு மற்றும் எலான் மஸ்க் அல்லது லேரி எலிசனுடன் கூட்டாக இணைந்து ‘டிக்டாக்’ செயலியை வாங்க விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். அப்போது ஆரக்கிள் கார்ப்பரேஷன் தலைவர் லேரி எலிசன் உடனிருந்தார். “டிக்டாக் விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான உரிமை எனக்கு உள்ளது. அதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், அதை வாங்கி பாதியை அமெரிக்காவுக்கு கொடுங்கள், அதற்கான அனுமதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். அதை வாங்குபவர்களுக்கு சிறந்த கூட்டாளி இருப்பார்” என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு அண்மையில் நிறைவடைந்தது. இந்த உத்தரவை முந்தைய பைடன் அரசு பிறப்பித்தது. தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் டிக்டாக் உரிமை மாற்றம் தொடர்பான காலக்கெடுவை மேலும், 75 நாட்கள் தாமதப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில்தான் அவர் இதை கூறியுள்ளார். அதே நேரத்தில் மஸ்க் வசம் டிக்டாக் உரிமையை வழங்குவது தொடர்பான பேச்சுவராத்தையில் டிக்டாக் ஈடுபடவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் டிக்டாக்கின் சந்தை மதிப்பு கூடிக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் டிக்டாக் நிறுவன பங்கில் சுமார் 50 சதவீதம் அமெரிக்கர்கள் வசம் இருக்க வேண்டியது அவசியம் என ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் மட்டும் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.