குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜன 26ம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும். வழக்கமாக இந்த விருந்தில் பங்கேற்க முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், வரும் ஜன.26 ம் தேதி இந்தியாவின் 76 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்தாண்டு, குடியரசு தின விழா தேநீர் விருந்தில் , முதல்வர் பங்கேற்காவிட்டாலும் அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.